சதொச வெள்ளைப்பூண்டு வழக்கில் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை
லங்கா சதொசவின் முன்னாள் சிரேஷ்ட விநியோக முகாமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்த போது அரசாங்கத்திற்கு 17 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (29) ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கையில்,

2021 ஆம் ஆண்டு இலங்கைச் சுங்கத்தினால் அரசுடைமையாக்கப்பட்ட இரண்டு கொள்கலன்களில் இருந்த 54,860 கிலோகிராம் வெள்ளைப்பூண்டை, சதோச நிறுவனம் ஊடாக பொதுமக்களுக்குச் சலுகை விலையில் விற்பனை செய்வதற்கு அப்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டது.
அவ்வாறு இருந்தும், அந்த வெள்ளைப்பூண்டுத் தொகையை பொதுமக்களுக்கு விற்பனை செய்யாமல் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் சதோச நிறுவனத்தினால் ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டு 445 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில்,
இந்த வெள்ளைப்பூண்டுத் தொகையை ஒரு கிலோகிராம் 135 ரூபாய் போன்ற குறைந்த விலைக்கு விற்பனை செய்தமையினால் அரசாங்கத்திற்கு ஒரு கோடியே 70 இலட்சத்து 6,660 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தது.
எவ்வாறாயினும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், வெள்ளைப்பூண்டுத் தொகையை விற்பனை செய்யத் தீர்மானித்தது தமது கட்சிக்காரர்கள் அல்ல எனவும், அது சதோச நிறுவனத்தின் நிறுவன ரீதியான தீர்மானம் எனவும் குறிப்பிட்டனர்.
அத்துடன், குறித்த வெள்ளைப்பூண்டுத் தொகை பழுதடையும் நிலையில் காணப்பட்டமையினாலேயே இவ்வாறு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.
இரு தரப்பினரும் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும் உத்தரவிட்டார்.
அதன் பின்னர் இந்த வழக்கு ஜூன் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்தது.