மலையக பகுதிகளுக்கு தொடரும் எச்சரிக்கை
Ditwah புயல் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக எந்த நேரத்திலும் மலையகப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

500 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி
இது வாழ்நாளில் எதிர்கொள்ளும் ஒரு பாரிய அசாதாரணமான நிலைமை என்று கூறினார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையகப் பிரதேசங்களில் 24 மணித்தியாலங்களில் 150 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி நிலவினால் அந்த இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் கடந்த 24 மணித்தியாலங்களில் 500 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி மலையகப் பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மலையகப் பகுதிகளில் எந்த நேரத்திலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண் மேடுகள் உள்ள இடங்களில் இருந்து உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய நிலைமையின்படி, அதிகாரிகளால் செய்யக்கூடியவை வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்தப் பகுதிகளுக்குச் செல்வது கூட அவர்களுக்குக் கடினமாக இருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.