யாழில் நடந்த காணி மோசடி ; சந்தேக நபர் விளக்கமறியலில்
வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்ரோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
அற்ரோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன் மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார்.
மற்றைய காணித் துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார்.
இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, நீதிமன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.