யாழில் காணி சுவீகரிப்புக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்!
யாழ்ப்பாணத்தில் நில அளவைக்கு சென்ற அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்ப்பால் காணி சுவீகரிப்பு செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று (26) காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.
பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர்
இதன்போது காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன் நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்தனர்.
பின்னர் நீண்ட நேர காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
அதேசமயம் சம்பவம் இடம்பெற்றபோது அதிகமான பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவின்கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான், புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளில் 12.0399 ஹெக்டயர் ( 29 ஏக்கர் 3 றூட் 0.20 பேர்ச் ) நிலம் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.