தமிழர் பகுதியில் காணி சுவீகரிப்பு முயற்சி: முழு விபரம்
யாழ்.மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக பொதுமக்களின் காணியை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் முயற்சி, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடைய எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.
மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகைதந்திருந்த நிலையில், அங்கு பிரசன்னமாகியுள்ள நிலையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் காணப்படும் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றினை அளவீடு செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிய வருகிறது.

குறித்த காணியினை வழங்குவதற்கு காணி உரிமையாளர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்து 2014 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை நில அளவைத் திணைக்களத்தினர் கைவசம் வைத்திருந்து அதனை காண்பித்து அளக்க முற்பட்டனர்.

இருந்தபோதிலும் காணி உரிமையாளர் அங்கு வந்தால் மட்டுமே காணி அளவீடு செய்ய அனுமதிக்கப்படும் என்று மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து அடுத்த சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து குறித்த பணிகளை கைவிட்டு திரும்பி சென்றுள்ளனர்.