யாழில் காணாமல் போன லலித்–குகன் ; கோட்டாபய வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் எந்தவொரு கள நடவடிக்கையிலும் தான் நேரடியாக ஈடுபடவில்லை என்றும், பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புப் பணிகளை மட்டுமே மேற்கொண்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கில், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (29) இணையவழியாக சாட்சியமளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பாதுகாப்புச் செயலாளராகப்பணியாற்றியதாகக் குறிப்பிட்ட அவர், தேசிய பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை பாதுகாப்புச் சபையே எடுத்ததாகவும், தான் சிவில் அதிகாரியாக ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.
கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பாக தனக்கு தெரிவிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து மட்டுமே அறிந்திருந்ததாகவும், அனைத்துச் சம்பவங்களும் பாதுகாப்புச் சபைக்கு அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களுக்கான உத்தரவுகளை தான் நேரடியாகப் பிறப்பித்ததாக சட்டத்தரணி முன்வைத்த குற்றச்சாட்டையும் கோட்டாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாட்சியப் பதிவைத் தொடர்ந்து, மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக நவம்பர் 27ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.