போதைப்பொருள் கடத்தல்காரரின் 93.27 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்
குருணாகல் - ஹங்கமுவ, இப்பாகமுவ பகுதியை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரின் 93.27 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொலிஸார் முடக்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டதுடன், இது அண்மைய காலங்களில் மிகப்பெரிய பறிமுதல்களில் ஒன்றாகும்.

மிகப்பெரிய பறிமுதல் நடவடிக்கை
அதன்படி கடத்தல்காரரின் சொகுசு ரக வேன், டிரக் ரக வாகனம் மற்றும் ஐந்து தனியார் வங்கிக் கணக்குகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கணக்குகளில் உள்ள மொத்த இருப்பு 73.3 மில்லியன் ரூபாயை தாண்டியுள்ளது. அதேநேரம், வாகனங்கள் 19.9 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடையவை என தெரியவந்துள்ளது.
புலனாய்வாளர்கள் 544 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த வெளிநாட்டுக் கணக்கையும் கண்டுபிடித்துள்ளனர், இதுவும் விசாரணையின் ஒரு பகுதியாக முடக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த நடவடிக்கை, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் குறித்த சந்தேகநபருடன் தொடர்புடைய 280 மில்லியக் ரூபாய்க்கும் அதிகமான தொகையை முடக்கிய முந்தைய பறிமுதல் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.