இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு குமார் சங்கக்கார பாராட்டு
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் அண்மைக்கால வரலாற்றுச் சாதனைகள் மற்றும் அவர்களின் முன்னேற்றம் குறித்து இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில், இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த அவர், 2023 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மண்ணில் வைத்து இங்கிலாந்து அணியை வீழ்த்தியமை ஒரு வரலாற்றுச் சாதனை எனவும் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்திலும் அவர்கள் தொடர்ந்து சாதிப்பார்கள்....
அத்துடன், 2024 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத்தை வென்றமை ஒரு மகத்தான வெற்றி என்றும், இது அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வெற்றிகளின் மூலம், உலகின் எந்தவொரு சிறந்த அணியையும் வீழ்த்தக்கூடிய வல்லமை எமது மகளிர் அணிக்கு உண்டு என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஒரு முக்கிய தொடருக்குச் செல்லும்போது, பயிற்றுவிப்பாளர், தலைவி மற்றும் ஒட்டுமொத்த அணியினரும் ஒரே இலக்கைக் கொண்டு பயணிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அணியின் நோக்கம் என்ன என்பதில் தெளிவு இருக்க வேண்டும் என்றும், வீரர்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் பலமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எடுக்கப்படும் தீர்மானங்களுக்குப் பின்னால் அணி உறுதியாக நிற்க வேண்டும் என்பதே அவரது கருத்தாகும். போட்டியின் போது ஏற்படும் அழுத்தங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசனையளித்த சங்கக்கார, ஒவ்வொரு பந்திலும் கவனம் செலுத்துவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
ஆடுகளம் மற்றும் காலநிலைக்கு ஏற்ப தங்களது பலங்களைச் சரியாகப் பயன்படுத்தி, துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் உச்சகட்டத் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.
எதிரணிகளுக்கு எதிராகச் சரியான திட்டமிடல்களை மேற்கொண்டு, தங்களது பலங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கை மகளிர் அணி ஏற்கனவே நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் அவர்கள் தொடர்ந்து சாதிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் குமார் சங்கக்கார வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.