கிருஷாந்தி கொலை வழக்கு ; குற்றவாளியின் வாக்கு மூலத்தால் மக்கள் போராட்டம்
கிருஷாந்திகுமாரசுவாமி கொலையின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரட்ண ராஜபக்ச என்கின்ற வீரர் நேரடியாக அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் இந்த செம்மணியை அணுகவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
கிருஷாந்திகுமாரசுவாமி கொலையின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரட்ண ராஜபக்ச என்கின்ற வீரர் நேரடியாக அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் இந்த செம்மணியை அணுகவேண்டும் என்ற பார்வை எனக்கு இருக்கின்றது.
300 முதல் 600 வரையிலான பேரை கொலை செய்து எங்களிடம் மேலதிகாரிகள் தருவார்கள் - தந்தார்கள்,இங்கு கொண்டுவந்து அவர்களை புதைத்திருக்கின்றோம் என அவர் சாட்சியம் வழங்கியிருந்தார்.
அதன் பின்னர் சர்வதேச அமைப்புகள் சர்வதே மன்னிப்புச்சபை போன்றன மேற்கொண்ட முயற்சிகள் மூலம் 99ம் ஆண்டு வரையிலே அகழ்வு பணியை மேற்கொண்டு சுமார் 19 எலும்புக்கூடுகளை அப்போதே கண்டுபிடித்திருந்தார்கள்.
அதுமட்டுமின்றி இன்று கட்டிடங்களிற்கான அகழ்வு வேலை இடம்பெற்றபோது சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன,அதற்கான வழக்குதொடுக்கப்பட்டு பின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு,நேற்றுவரை 90 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது ஒரு இனஅழிப்பின் சான்றாக , ஒரு இனத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட பெரும் கொலையாக நாங்கள் பார்க்கவேண்டும்- பல சிங்கள சகோதரர்கள் எங்களுடன் பேசும்போது,தர்க்கம் செய்யும்போது விடுதலைப்புலிகளின் கொலைகளை பற்றியெல்லாம் பேசுகின்றார்கள்.
அதுவல்ல இங்கு பிரச்சினை விடுதலைப்புலிகளை அரசாங்கம்பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியுள்ளது,பாதுகாப்பு படையினர் என்ற பெயரிலே மக்களை பாதுகாக்க வந்தவர்கள் கொலை செய்திருந்தால்,அது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம் என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்த நாட்டிலே இராணுவீரர்கள் வெற்றிவீரர்களாக அனைவராலும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதேநாட்டின் பிரஜைகளை கொன்றொழித்தவர்களை எவ்வாறு வெற்றிவீரர்களாக கொண்டாடுவது என்ற கேள்வி ஒரு சமூகத்திற்கு இருக்கின்றது.
எனவே அந்த அடிப்படையில் சோமரட்ண ராஜபக்ச உயிரோடு இருக்கின்றார்,உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் இருக்கின்றார்கள், அவர்களிற்கு எல்லாம் தலைமை தாங்ககூடிய,முப்படை தளபதியாக இன்றைய ஜனாதிபதியிருக்கின்றார் எனவே இதற்கான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
இந்த பாரிய குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும், இதற்காக உள்நாட்டு பொறிமுறை சரியான விதத்தில் வேலைசெய்யவில்லை என தமிழ் மக்களாகிய நாங்கள் உணர்கின்றோம்,
இங்கிருக்கும் மலையகசகோதரர்கள் அதனை உணர்கின்றார்கள் எனவேதான் சர்வதேச நீதி விசாரணையொன்று அவசியம் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்.