முக்கிய அமைச்சர்கள் மூவரை விளாசிய கோட்டாபய; அழைத்து விருந்துவைத்த பிரதமர்!
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர்மீது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ கடும் அதிருப்தியில் இருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த மூவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, கடுமையாக திட்டியதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டி அந்த செய்தி வெளியாகியுள்ளது.
‘பொது முடக்கம்’ தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் வாய் திறக்காது, வெளியில்சென்று கூட்டறிக்கை விடுத்தமை தொடர்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறித்த அமைச்சர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடியிருக்கலாம் என்றும், அதைவிடுத்து இவ்வாறு கூட்டு பொறுப்பைமீறும் வகையில் செயற்படக்கூடாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக அமைச்சர்கள் மூவரும் கடும் சீற்றமடைந்த நிலையில், அவர்களை அலரிமாளிக்கைக்கு அழைத்து விருந்து வைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, மூவரையும் சமாதானம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேவேளை, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பங்காளிக்கட்சிகளின் செயற்பாடு குறித்து மொட்டு கட்சி தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.