மாலபே பொலிஸாரை கைது செய்த கொட்டாவ பொலிஸார்!
கொட்டாவ வித்தியால சந்தியில் இளைஞர் ஒருவரிடமிருந்து தங்க நகை மற்றும் கைப்பேசியை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மாலபே பொலிஸில் கடமையாற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான பொலிஸ் உத்தியோகத்தர்களில் சார்ஜென்ட் ஒருவரும் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேசமயம் மூன்று கான்ஸ்டபிள்களில் ஒருவர் மாலபே பொலிஸின் விசேட பொலிஸ் பணியகத்தில் கடமையாற்றுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் கைதான பொலிஸார் கொள்ளைக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி, திருடப்பட்ட தங்க நகை மற்றும் கையடக்க தொலைபேசி என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னனி
வலஸ்முல்ல, வீரகட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவர் கடந்த 20ஆம் திகதி கொட்டாவ வித்தியால சந்தியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்து, அந்த வீட்டின் முன் வீதியில் நின்று கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டியில் வந்த நான்கு சந்தேக நபர்களும் இளைஞனை நெருங்கி வழி கேட்பதாக கூறி அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் இளைஞன் கடந்த 21ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த முச்சக்கரவண்டி மாலபே பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிளுக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்டது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்