மலையகப் பகுதியில் பதிவான மற்றுமொரு பயங்கர சம்பவம்!
கொட்டகலை பகுதியில் உள்ள தனிவீடு ஒன்றில் சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (27-12-2021) 2 மணியளவில் திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிஸ்மஸ்பாம் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டின் உரிமையாளர் தண்ணீர் சுட வைப்பதற்காக அடுப்பினை மூட்டிவிட்டு தேயிலை எடுப்பதற்காக சமையலறையை விட்டு வெளியேறிய போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வெளியேறியதன் காரணமாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையென வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அடுப்பு முற்றாக சேதமடைந்துள்ளது. குறித்த அடுப்பிற்கு லிட்ரோ எரிவாயு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த எரிவாயு சிலிண்டரை ஒரு மாதத்திற்கு முன் கொட்டகலை பகுதியில் எரிவாயு விற்பனை நிலையமொன்றில் கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.