மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய கோப்பாய் பொலிஸார்; 7 வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது. யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எட்டு வீடுகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையம்
அந்த பொலிஸ் நிலையம் எட்டு சிவில் மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அந்த வீடுகளில் ஏழு வீடுகளை மீண்டும் அந்த நபர்களுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய இன்று (15) அந்த வீடுகள் நீதிமன்ற அதிகாரியால் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, தற்காலிகமாக அந்தப் பகுதியின் முறைப்பாடுகளை யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் கிடங்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு மாதங்களில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை மீண்டும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.