டுபாயில் கைதான கொலன்னாவை சந்தனவுக்கு விளக்கமறியல்
சர்வதேச பொலிஸாரால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட “கொலன்னாவை சந்தன” என்ற பிரதீப் கந்தருவன் சந்தன என்பவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த “ரொட்டும்ப உபாலி” , கந்தகம தெனியே கெதர பிரதீப் கந்தருவன் எனப்படும் , “கொலன்னாவை சந்தன” மற்றும் ரன்முனி மஹேஷ் ஹேமன்த சில்வா ஆகியோர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை (07) இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.
விளக்கமறியல் உத்தரவு
இதனையடுத்து, “கொலன்னாவை சந்தனவை” 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, “கொலன்னாவை சந்தன” தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு, நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“கொலன்னாவை சந்தன” என்பவர், 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் காயப்படுத்தல்,பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தல் ,
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தல்,
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தல்
மற்றும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் ஆவார்.