தையிட்டி விகாரை கட்டும்போது ஏன் கேள்வி எழுப்பவில்லை; உடைத்தால் தீர்வு கிடைக்குமா!
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையின் காணி தொடர்பில் யாழ்ப்பாண மக்களின் விருப்பத்தை முதலில் கவனத்திற் கொள்ள வேண்டுமென இலங்கை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரைக் காணி தொடர்பில் காணி உரிமையாளர்கள் இன்று (11) ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கட்டும்போது எதுவும் பேசாதவர்கள் இன்று பேசுவது புதிராகவுள்ளது
தையிட்டியில் விகாரை கட்டி முடிக்கப்பட்டு மத வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன. இதைக் கட்டும்போது எதுவும் பேசாதவர்கள், இதைப் பற்றி இன்று பேசுவது புரியாத புதிராகவுள்ளது.
எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பேசுவதற்கு இவர்களுக்கு எதுவும் இல்லை. இதனால்தான், இவ்விடயத்தைத் தூக்கிப் பிடித்துள்ளனர்.
இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் சிலர்,மீண்டும் அரசியலுக்காகப் பேச முன் வந்துள்ளனர். இந்த விகாரை கட்டி முடிக்கப்படும் வரைக்கும் இங்கிருந்தோர் எதையும் பேசவில்லை. மக்களின் விருப்பத்தையறிந்து அன்றிருந்தவர்கள் செயற்படாதது ஏன்?
இப்பிரச்சினைக்கு மக்களோடு கலந்துரையாடி தீர்வு காண்போம். விகாரை கட்டப்பட்டுள்ள இடம் மக்களுடையது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இவர்களுக்கு நட்டஈடு அல்லது காணிகளை வழங்க வேண்டிய தேவை உள்ளது.
விகாரையை உடைத்து நொறுக்கி விட முடியுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. உடைத்து நொறுக்குவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு வருமா? இது பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எவ்வாறாயினும், இதற்கு சுமுகமான தீர்வை காண்பது அவசியம். அரசியல் ரீதியாகத் தோல்வியுற்றோர் ஜக்கியப்பட்டுள்ள மக்களைப் பிரிக்கப் பார்க்கின்றதாக தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் எவராலும் மக்களைப் பிரிக்க இயலாது என்றும் கூறியுள்ளார்.