யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையின் அதிபர் தற்காலிகமாக நீக்கம்!
யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்து கல்லூரி அதிபர் விசாரணை குழு அறிக்கையின் பிரகாரம் மேலதிக விசாரணைக்காக பாடசாலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
கொக்குவில் இந்து கல்லூரி அதிபர் பல்வேறுபட்ட முறைகேடுகளுடன் தொடர்புபட்டுள்ளதாக பாடசாலை பழைய மாணவர் சங்கம் வடமாகாண கல்வி அமைச்சுக்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது.
பாடசாலை மாணவர் அனுமதி மற்றும் கட்டட ஒப்பந்தங்களில் மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் இவர் மீது முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், யாழ் கல்வி வலயத்தில் முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணனுக்கும் பாடசாலையில் இடம்பெற்ற மோசடிகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ள நிலையில் அதிபர் தொடர்ச்சியாகக் காப்பாற்றப்பட்டு வந்துள்ளார்.
பாடசாலையின் மோசடி தொடர்பில் தகவல் அறியும் சட்டமூலம் சில கோரிக்கைகள் முன்வைத்த போது அரசியலமைப்புக்கு முரணாக தகவல் கேட்பவர் பொலிஸ் நற்சான்றிதழ் தர வேண்டும் தட்டிக் கழித்து வந்தார்.
இந்த நிலையில் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை குழு ஒன்றை நியமித்திருந்தார்.
குறித்த விசாரணை குழுவில் தற்போதைய வடமாகாண ஆளுநரின் செயலாளராக உள்ள நந்தகோபன் பக்க சார்பாக செயற்பட்டதாக பழைய மாணவர் சங்கம் முன் வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கல்வி அமைச்சு சாராத கணக்காளர் ஒருவர் விசாரணை குழுவில் நியமிக்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது.
குறித்த விசாரணை குழுவின் அறிக்கை அதிபர் தொடர்பில் பல்வேறுபட்ட பாதகமான முடிவுகளை வழங்கியுள்ள நிலையில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய வலயக் கல்வி பணிமனைக்கு மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.