சிவனொளிபாத மலையில் Koenigia Mollis!
சிவனொளிபாத மலையைச் சுற்றியுள்ள அயனமண்டல மழைக்காடுகளில் “கோனிஜியா மோலிஸ்” (Koenigia Mollis) என்ற ஆக்கிரமிப்புத் தாவர இனங்கள் பரவுவதை உடனடியாக தடுக்குமாறு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிர் பல்வகைமையினை பாதுகாப்பில் கவனம் செலுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்தவும், ஆக்கிரமிப்பு தாவரத்தை அகற்ற விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சிவனொளிபாத மலைக்குச் செல்லும் வீதிகள், கடைத்தொகுதிகள் மற்றும் மலசல கூடங்கள் அருகில்ஆக்கிரமிப்பு தாவரம் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Koenigia Mollis பரவியுள்ள பகுதிகளில் பூர்வீக தாவர இனங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. 6 முதல் 8 அடி உயரம் வரை வளரும் ஆக்கிரமிப்பு தாவரம் மலைப்பகுதிகளுக்கு அருகிலுள்ள தாவரங்களில் வேர் அமைப்பின் உறுதித்தன்மையை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது.
இதன்காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவை ஏற்படுத்தும் என சப்ரகமுவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Koenigia Mollis பரவும் நிலத்திலுள்ள தாவரங்கள் மீது தீவிர தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Koenigia Mollis முதலில் மியன்மார் மற்றும் கிழக்கு இமயமலையில் தோன்றியது. இது தற்போது நேபாளம் மற்றும் சீனாவிலும் பரவியுள்ளது.
யுனெஸ்கோ, சுற்றுச்சூழல் குழுக்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளின் அதிகாரிகளைக் கொண்ட அறிவுசார் குழுவை அமைக்க பரிந்துரைத்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்