இலங்கைக்கு சுதந்திர தின வாழ்த்து கூறிய பிரித்தானிய மன்னர்
இலங்கை இன்று புதன்கிழமை (பெப் 04) 78 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், இலங்கை ஜனாதிபதிக்கும் மக்களுக்கும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திர தினத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்ட மன்னர் சார்ள்ஸ் கடிதத்தில்,

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று உறவுகள்
பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான வரலாற்று உறவுகள் மற்றும் நீடித்த கூட்டாண்மை குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்களின் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டியதுடன், கல்வி, வர்த்தகம் மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதைப் பாராட்டியுள்ளார்.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையைத் தாக்கிய தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை இது நினைவூட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தானும் தனது மனைவியும் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இலங்கைத் தலைவர்களைச் சந்தித்து எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகத் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.