பாலர் பாடசாலை சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம் ; இருவர் கைது
களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில், பாலர் பாடசாலை பிள்ளைகள் பயணித்த முச்சக்கர வண்டியிலிருந்த சிறுமி ஒருவரின் தலை, டிப்பர் ரக வாகனத்தில் மோதியதில் அச்சிறுமி உயிரிழந்துள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி பாலர் பாடசாலை நிறைவடைந்ததும் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை
முச்சக்கர வண்டி மில்லனிய ரன்மினிக பிரதேசத்தை வந்தடைந்தபோது, அதற்கு எதிர்த் திசையிலிருந்து ஒரு டிப்பர் ரக வாகனம் வேகமாக வந்துள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியின் பின் இருக்கையின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமி, வண்டியில் இருந்து வெளியே தலையை நீட்டியபடி வந்தபோது, எதிர்த் திசையில் வந்த டிப்பர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் 04 வயது சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக டிப்பர் ரக வாகனத்தின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மில்லனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.