வைத்தியசாலையிலிருக்கும் சுரேஷ் சலே சட்டத்தரணிகளிடம் கூறிய முக்கிய விடயம் ; சூடு பிடிக்கும் விவகாரம்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பிலான சதித்திட்டம் தீட்டியமை மற்றும் ஒருங்கமைத்தமை, நெறிப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறைப் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடரும் என அவரைச் சந்தித்த சட்டத்தரணிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சுரேஷ் சலே தொடர்ச்சியாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில், அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பலவீனம் காரணமாக அவரைச் சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக திங்கட்கிழமை (8) குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது.

வைத்தியசாலையில் சுரேஷ் சலே
கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்த விடயங்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பகல் வேளையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சுரேஷ் சலேவை அவரது சட்டத்தரணிகள் குழு சென்று பார்வையிட்டிருந்தது.
இதன்போது தற்போது சுரேஷ் சலேயின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், அவருக்குச் சேலைன் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவரது சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தான் ஆரம்பித்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை சுரேஷ் சலே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப் போவதாகத் தம்மிடம் தெரிவித்ததாகச் சுரேஷ் சலேயின் சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர