தவறான தகவல்களை வெளியிட்ட கெஹல்பத்தர பத்மே ; விசாரணையில் வெளியான தகவல்
கெஹல்பத்தர பத்மேவிடம் நடைபெற்ற விசாரணையின்போது தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இஷாரா செவ்வந்தியுடன், நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினரான கம்பஹா பபா என்ற சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ரி-56 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கம்பஹா பபாவிடம் விசாரணை
இதேவேளை, நேற்று பேலியகொடை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துவரப்பட்ட கம்பஹா பபாவிடம் மேற்கொண்ட விசாரணையின்போதே கந்தானை - கெரவலப்பிட்டி அதிவேக வீதியின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வடிகால் கட்டமைப்பில் இருந்து சுமார் 50 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த தோட்டாக்கள் கெஹெல்பத்தர பத்மேவினால் தமக்கு வழங்கப்பட்டதாக அவர் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த தோட்டாக்களை வெலிசறை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.