நீதிமன்றில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் திருட்டுத்தனம் அம்பலம்!
தனது கணக்கில் வைப்பிலிடப்பட்ட அனைத்துப் பணத்தையும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்ல பெற்றுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய நிஷாந்த பண்டார பஸ்நாயக்க தெரிவித்ததாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் அனுஜா லக்மாலியிடம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்துக்கு பாரிய நிதி இழப்பு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தெரிவித்தபோது தனது பெயரில் ஒரு கணக்கு திறக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கணக்கில் உள்ள அனைத்துப் பணத்தையும் திருமதி அமலி ரம்புக்வெல்ல எடுத்துக் கொண்டதாக பண்டார பஸ்நாயக்க கூறியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கூறியுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பணியாற்றிய 2021/2023 காலகட்டத்தில், கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாக 15 பேரை நியமித்துள்ளார்.
அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை அவரது தனிப்பட்ட செலவுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தி இருந்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய நிஷாந்த பண்டார பஸ்நாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இவ்வாறு கூறியது.