5 ரூபாய் அதிக விலைக்கு அரிசி விற்பனை; 5 இலட்சம் ரூபாய் அபராதம்
வெலிமடைப் பகுதியில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு நீதிமன்றத்தினால் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கீரி சம்பா (GR 11) அரிசியை 260 ரூபாவுக்கு விற்பனை செய்ததன் மூலம், அரசாங்கம் நிர்ணயித்த 255 ரூபாய் என்ற அதிகபட்ச சில்லறை விலையை விட 5 ரூபாய் அதிகமாக அறவிடப்பட்டமை தொடர்பில், நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

முறைகேடு கண்டறியப்பட்டது
கடந்த 2025 டிசம்பர் 04ஆம் திகதி (வியாழக்கிழமை), நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த முறைகேடு கண்டறியப்பட்டது.
இதன்போது, அதிகார சபையின் விசாரணை அதிகாரி ஒருவர் குறித்த பல்பொருள் அங்காடியில் இருந்து ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை 260 ரூபாவுக்குக் கொள்வனவு செய்ததன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாகப் பணம் அறவிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
எனவே, பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோர் உரிமை மீறல்கள் தொடர்பில் பொதுமக்கள் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.