காஷ்மீரை போன்று தமிழ் நாட்டில் நடக்காது என்பது நிச்சயமா? கேள்வி எழுப்பிய உமர் அப்துல்லா
நான் எங்கே வாழ வேண்டும், என்ன உண்ண வேண்டும் என்பதை தீர்மானிக்கிற உரிமை என்னிடம் இருக்கிறது. அது இப்போது நிராகரிக்கப்படுகிறது என காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா (Omar Abdullah) தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் (M. K. Stalin) எழுதிய உங்களில் ஒருவன் என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan), காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், நடிகர் சத்யராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துறை வழங்கி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா பேசுகையில்,
'' காஷ்மீரில் இருந்து வெகுதொலைவில் இருக்கும் தமிழ்நாடும் திமுகவும் ஸ்டாலினும் எங்களுக்காக குரல் கொடுத்தனர். அன்று ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுத்த தமிழக மக்கள், திமுகவுக்கு நன்றி சொல்ல வருகை தந்துள்ளேன்.
ஜம்மு காஷ்மீர் மக்களும் எங்கள் கட்சியும் உங்களுக்கு தோளோடு தோளாக எப்போதும் துணை நிற்போம். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு ரத்து செய்யப்பட்டபோது யார் நண்பர்கள் என அறிந்துகொண்டோம். மத சுதந்திரம் என்பது தற்போது நாட்டில் ஒடுக்கப்பட்டுள்ளது. நான் எந்த மதகுறியீட்டை பின்பற்ற வேண்டும் என்பதற்கு உரிமை இருக்கிறது.
புர்கா, ஹிஜாப் எதை அணிவது என்பது தனிநபரின் அரசியல் சாசன உரிமை. இந்தியாவில் மத சுதந்திர உரிமை என்பது மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொழி சுதந்திர உரிமை என்பதும் ஒடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரி, தமிழ் என எந்த மொழியில் பேசுவது என்கிற தனிநபர் உரிமை இப்போது மறுக்கப்படுகிறது. எந்த உடையை அணிய வேண்டும் என்கிற உரிமை ஒடுக்கப்பட்டுள்ளது. நான் எங்கே வாழ வேண்டும்? என்ன உண்ண வேண்டும் என்பதை தீர்மானிக்கிற உரிமை உள்ளது. இப்போது அது நிராகரிக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களைவிட மிக இளவயதிலேயே 13 வயதில் அரசியலுக்கு வந்துள்ளார். சமூக நீதி, வளர்ச்சி, மேம்பாட்டில் அக்கறை கொண்டு செயல்படுகிறார் ஸ்டாலின்.
நாளை முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள். காஷ்மீரின் அடையாளத்தை அவருக்கு பரிசாக கொண்டுவந்துள்ளேன். நான் இன்று இங்கு வந்துள்ளேன். நாளை ஒருநாள் ஸ்டாலினும் காஷ்மீருக்கு வருவார்'' என்று உமர் அப்துல்லா பேசினார்.
மேலும், உமர் அப்துல்லா பேசுகையில், இந்தியா என்பது அரசியல் சாசனத்தின்படி கூட்டரசு அமைப்பு. தமிழகம், கேரளா, காஷ்மீர் என மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மத்திய அரசு நினைத்தால் ஒரு மாநில தலைமை செயலாளரை தூக்கி அடிக்க முடிகிறது.
ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு தொடங்கிய ஒடுக்குமுறை இந்தியா முழுவதும் நடைபெறப் போகிறது. ஜம்மு காஷ்மீர் என்கிற எங்களது மாநிலத்தை, மக்களின் கருத்தை கேட்காமல் 2 யூனியன் பிரதேசங்களாக கூறு போட்டுவிட்டனர். இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு மாநிலம் முதல் முறையாக யூனியன் பிரதேசங்களாக கூறு போட்டுவிட்டனர்.
மாநிலங்களின் உரிமைகளை முதல்வர்களின் உரிமைகளை சட்டசபைகளின் உரிமைகளை ஆளுநர்கள் கைப்பற்றக் கூடும். தமிழகம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது என்று திடீரென அறிவிக்கப்படாது என்று என்ன நிச்சயம். வேற்றுமை கொண்டவர்களாக இருந்தாலும் இந்தியர்களாக நாம் ஒருங்கிணைந்து நிற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.