கர்ன்னகொட வழக்கு: வாய்மொழி கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!
இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு (Wasantha Karannagoda) எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை கைவிடுமாறு சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட வாய்மொழி கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குற்றப்பத்திரிகையை நிரும்ப பெற சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதால் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு (Wasantha Karannagoda) எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை தொடர வேண்டாம் என அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.
மூன்று பேர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டுமானால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அல்லது எழுத்துமூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
ஆகவே வாய்மொழி கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்து மூன்று பேர் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் சம்பவத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட (Wasantha Karannagoda) 14வது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இதேவேளை, குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்து மற்ற 13 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை தொடர சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி நீதிமன்றில் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.