மகிந்தவின் சகாவின் உயிர்மாய்ப்பு தொடர்பில் மர்மம் - முன்கூட்டியே திட்டமிட்டதாக பொலிஸார் தெரிவிப்பு
சமகால அரசாங்கத்தில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களில் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், அது குறித்து அரசியல் மட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராஜபக்சர்கள் நெருங்கிய தொடர்புள்ளதாக அம்பலப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மோசடியின் விசாரணையின் முக்கிய சாட்சியாளர் உயிரிழந்துள்ளமை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான கபில சந்திரசேன, ஏற்கனவே உயிரை மாய்க்க திட்டமிட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
முன்கூட்டியே திட்டம்
கபில சந்திரசேன உயிரை மாய்ப்பதற்காக பயன்படுத்திய பெல்ட், 7ஆம் திகதி பிற்பகலில் ஒரு பணியாளரால் அவரது பார்ன்ஸ் பிளேஸ் வீட்டிலிருந்து கொழுப்பிட்டியவில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது என்ற தகவலின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகளுக்கு இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது.
அந்தப் பணியாளரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குறித்த பெல்ட் அவரது வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டமையானது, அவர் முன்கூட்டியே உயிரை மாய்க்க திட்டமிட்டிருந்தார் என்பதை உறுதிப்படுத்த வலுவான சான்றாக அமையும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கபில சந்திரசேனவின் சடலத்தின் கழுத்தில் கண்டெடுக்கப்பட்ட பெல்ட்டின் பாகங்கள், அவர் பார்ன்ஸ் பிளேஸில் உள்ள தனது வீட்டிலிருந்து கொண்டுவந்த பெல்ட்தான் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அதை பொலிஸாரிடம் கொண்டுவந்த பணியாளர், கபில சந்திரசேன இந்தப் பெல்ட்டைத் தனது சில ஆடைகளுடன் கொண்டுவந்ததாகத் தெரிவித்துள்ளார்.
கபில சந்திரசேன இந்தப் பெல்ட்டை அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் இடமான ஜிம்மிற்கு எடுத்துச் செல்வதால், அதைக் கொண்டு வருமாறு அவரிடம் கேட்கப்பட்டதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அந்த ஊழியர் கூறியுள்ளார்.
பிரேதப் பரிசோதனை
எனினும் கபில சந்திரசேன முன்கூட்டியே உயிரை மாய்க்க திட்டமிட்டிருந்ததால், இந்தப் பெல்ட்டைத் தனது வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் கபில சந்திரசேனாவின் மரணம் குறித்து நேற்று வரை உறுதியான முடிவு எட்டப்படவில்லை. பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவக் குழு, அவரது உடலின் சில பகுதிகளைச் சிறப்பு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. ஆய்வகப் பரிசோதனையானது,
மரணத்தின் தன்மையைத் துல்லியமாகத் தீர்மானிக்க உதவும் என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மரணம் குறித்துப் பல்வேறு தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பாரிய நிதி மோசடியில் சிக்கியிருந்த கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.