மீண்டும் வழமைக்கு திரும்பிய கண்டி - நுவரெலியா வீதி
கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த கண்டி - நுவரெலியா வீதி உட்பட 4 வீதிகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (10) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

போக்குவரத்து
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் மேற்குறிப்பிட்ட வீதிகள் கனரக வாகனப் போக்குவரத்திற்காக திறக்கப்படுவதாகக் கூறினார்.
மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நுவரெலியா - கண்டி பிரதான வீதி இவ்வாறு பல நாட்களின் பின்னர் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. கட்டுகித்துல, தவலந்தென்ன, ரம்பொடை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல இடங்களில் அந்த வீதியில் பாரியளவில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இராணுவத்தின் பொறியியல் படையணி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை இணைந்து அவ்வீதியை முழுமையாக புனரமைத்து, ஒரு வழித்தடத்தை மட்டும் இலகு ரக வாகனங்களுக்கு திறக்க நடவடிக்கை எடுத்திருந்தன.
இருப்பினும், இவ்வீதியில் பயணிக்கும் போது அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும், மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் பொலிஸார் சாரதிகளை கேட்டுக்கொள்கின்றனர்.