வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட மர்ம பொருட்கள்: நபரொருவர் அதிரடி கைது!
புத்தளம் - கற்பிட்டியில் உள்ள வீடொன்றிலிருந்து பெருமளவிலான பீடி இலைகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பொலிஸாரும், இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளும் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கற்பிட்டி - கீரிமுந்தல் கடற்கரை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த வீட்டில் 9 உரைப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 288 கிலோ கிராம் நிறையுள்ள பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பீடி இலைகள், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு, இலங்கையின் பல இடங்களுக்கு விநியோகிக்கும் நோக்கில் இவ்வாறு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.
இச்சம்பவத்தில் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.