வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா ; ஏற்பாடுகள் தீவிரம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
இம்முறை இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 8,000 யாத்திரிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படை வசதிகள்
யாத்திரிகர்களின் வசதிக்காக விசேட படகு மற்றும் பேருந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரை இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.
யாத்திரிகர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு விசேட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளைக் கடற்படையினர் தற்போது தயார் செய்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து செல்பவர்கள் தமது தேசிய அடையாள அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். யாத்திரிகர்கள் தமது பிரதேச செயலகம் அல்லது பங்குத்தந்தை ஊடாக முன்கூட்டியே பதிவு செய்திருப்பது அவசியமாகும்.
அதேபோன்று இந்தியாவிலிருந்து வரும் யாத்திரிகர்கள் ஆதார் அட்டையின் அசல் மற்றும் அதன் நிழற்படப் பிரதிகள், உள்ளூர் பொலிஸாரிடமிருந்து பெறப்பட்ட தடையின்மைச் சான்றிதழ், 3 கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் என்பனவே தேவையாகும் பொதுவாக 5 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே படகுப் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இலங்கைத் தமிழ் அகதி முகாம்களில் வசிக்கும் இந்தியாவிலுள்ளவர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.