இனப்படுகொலைக்கான நீதியை பெற தொடர் முயற்சி ; கனடா பிரதமர் உறுதி
முள்ளிவாய்க்கால் நினைவுநாளை முன்னிட்டு கனடா பிரதமர் மார்க் கார்னி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக கனடாவின் பிரம்டன் நகரசபை, தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைத்திருந்தது.
இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.
இந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், இழந்த உயிர்களை - துண்டாடப்பட்ட குடும்பங்களை, பேரழிவிற்குள்ளான சமூகங்கள் மற்றும் இன்றுவரை காணாமல் போனவர்களை நினைவு கூருகிறோம்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமானது,
உடனடி வெளியீட்டுக்கு
தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு பிரதம மந்திரி கார்ணி வெளியிட்ட அறிக்கை
மே 18,2025. ஓட்டாவா, ஒன்றாரியோ பிரதம மந்திரியின் அலுவலகம்
தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு பிரதம மந்திரி மார்க் கார்ணி இன்று பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்.
இலங்கையில் ஆயுதப்போர் முடிவடைந்து இன்றுடன் 16 வருடங்கள் ஆகிவிட்டன. 26 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்தப் போரில் பல பத்தாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்தத் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளில் இழந்த உயிர்களையும், சிதறிப்போன குடும்பங்களையும், பேரழிவடைந்த சமுகங்களையும், இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே இருப்போரையும் நாம் நினைவுகூருகிறோம்.
அத்துடன், தமது அன்புக்குரியவர்களின் நினைவுகளைச் சுமக்கும் கனேடிய தமிழ்ச் சமூகத்தையும், கனடாவின் பல பகுதிகளிலும் திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளையும் நாம் மனதிற்கொள்கிறோம்.
பொறுப்புக்கூறலுக்கும், உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது.
இந்த நினைவேந்தல் நாளை நாம் கடைப்பிடிக்கும்போது, துணிவுடன் அஞ்சலி செலுத்துவதற்கான உறுதிப்பாட்டையும், நீடித்திருக்கும் அமைதிக்காகச் செயற்படுவதற்கான உறுதிப்பாட்டையும் அது பலப்படுத்தட்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.