கட்சி தாவலுக்கு தயாராகும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ?
எதிரணியில் அமர வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் தனக்கு கிடையாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது எமது ஆட்சி. நாம்தான் ஜனாதிபதியை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வெளியாகும் தகவல் வதந்தி
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்கள் சிலர் எதிரணியில் அமரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நாம் எதிரணியில் அமர்வதற்கு முற்படவில்லை. இது தொடர்பில் வெளியாகும் தகவல் வதந்தியாகும். எம்மை இலக்கு வைத்து திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்படும் செய்தி என்றும் அவர் கூறினார்.
நாம் ஜனாதிபதியொருவரை நியமித்துள்ளோம். அரசின் செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெறுகின்றன. எனவே எமக்கு அமைச்சு பதவி முக்கியம் அல்ல என்றும் நாட்டின் முன்னேற்றமே முக்கியம் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.