பீதியை கிளப்பும் JN1 கொரோனா வைரஸ்; அறிகுறிகள் இவை தான்
இந்தியாவில் ஓமிக்ரானின் துணை வேரியண்ட் எனப்படும் புதிய JN1 கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இது இலங்கையிலும் பரவக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் துறைசார் வல்லுநர்கள் JN1 கொரோனா வைரஸ் தாக்குதலை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளனர், ஏனெனில் இந்த திரிபு உடலை மிகவும் ஆழமாக பாதிக்கிறது என்பதோடு, இதிலிருந்து மீள அதிக காலம் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
JN.1 மாறுபாடு, செப்டம்பரில் சுகாதார அதிகாரிகளால் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது எனவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
JN.1 அறிகுறிகள் - சோர்வு, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தலைவலி
JN.1 BA.2.86 வகை கொரோனாவான இது பைரோலா ஸ்ட்ரெய்ன் என அழைக்கப்படுகிறது. அறிகுறிகள் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் இதழில் வெளியான தகவலில்,
இந்த புதிய திரிபு சோர்வு, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தலைவலி, வாசனை இழப்பு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் அதிகப்படியான இருமல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தத் தொடங்குகிறது.
மேலும் இதற்கான அறிகுறி தெரியவந்தால், முடிந்தவரை பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது, குணமடைய அதிக நேரம் ஆகலாம் மேலும் கடுமையான நோயை ஏற்படுத்தலாம்.
அதன் ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் பிறழ்வுகளால் எளிதில் தொற்றும் திறன் இருக்கலாம்.
இந்தியாவில் JN.1 வைரல் பரவல் குறித்த வாராந்திர மதிப்பிடப்பட்ட கணக்குகளின் படி, பரவல் விகிதம் 84.2 சதவிகிதம் ஆகும் அதாவது கடந்த எட்டு மாதங்களில் காணப்பட்ட மற்ற திரிபுகளை விட இந்த மாறுபாடு வேகமாக பரவுகிறது எனவும் கூறப்படுகின்றது.
முக கவசம் அவசியம்
JN.1 வகை கொரோனா வைரஸால் பாதிப்பு குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் கூறினாலும், இந்த வைரஸ் மீண்டும் மீண்டும் தாக்கும்போது மாரடைப்பு, பக்கவாதம், மனச்சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எனவே, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படாவிட்டாலும், வெளி இடங்களுக்கு செல்லும்போது தன்னிச்சையாக முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது என்கிறார்கள். குறிப்பாக, முதியவர்கள், கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிவதோடு, காய்ச்சல், சளி இருப்பவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
கொரோனா தடுப்பூசி குறித்து எதிர்மறை கருத்துகள் பரவி வந்தாலும், கொரோனாவால் ஏற்படும் பெரிய அளவிலான பாதிப்புகளை குறைத்துள்ளது என்பது மருத்துவர்களின் கருத்து.
அதேவேளை சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 69 லட்சம் எனபது குறிப்பிடத்தக்கது.