பொலிஸாருக்கே இந்த நிலையா: பெண் காவலருக்கு அதிகாலையில் நடந்த சம்பவம்
பேருவளை காவல் நிலையத்தில் பணிக்குச் செல்வதற்காக உந்துருளியில் பயணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட முயன்ற இருவர், சங்கிலியில் இருந்த பதக்கத்தை மட்டும் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற சந்தேகநபர்கள்
மற்றுமொரு உந்துருளியில் வந்த இருவர், குறித்த பெண் காவல்துறை உத்தியோகத்தரை இடைமறித்து, அவர் அணிந்திருந்த பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது, அவர் சங்கிலியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டதால், பதக்கத்தை மாத்திரம் அறுத்துக்கொண்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேருவளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் சம்பவ இடத்தைப் பரிசோதித்து, அருகிலுள்ள பாதுகாப்புக் கெமராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தப்பிச் சென்றதாக கூறப்படும் குறித்த சந்தேகநபர்கள் கீரந்திடிய, பதனகொட பகுதியை நோக்கிச் சென்றதாகவும், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.