ஐரோப்பா சென்று இடைநடுவில் திரும்பிய யாழ் இளைஞன் மருத்துவமனையில் ; மக்களே அவதானம்!
யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயதான இளைஞர் ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே வைத்தியர் இதனை தெரிவித்தார். அவரது செய்திக்குறிப்பில்,
மத்திய ஆபிரிக்க நாட்டில் இறக்கிவிடப்பட்ட இளைஞன்
இளைஞன் ஐரோப்பாவிற்குச் செல்வதாக முகவர்களினால் கடந்த வருடம் 2024 மார்கழி மாதம் 28ஆம் திகதி விமானத்தில் கொழும்பு, மும்பை, நைரோபி வழியாக சியாரா லியோன் என்ற மத்திய ஆபிரிக்க நாட்டில் இறக்கிவிடப்பட்ட நிலையில் அவரது பயணம் தடைப்பட்டுளது.
அதோடு குறித்த இளைஞன் சுகவீனமுற்று இருந்தமையால் குடும்பத்தவர்களால் மீளவும் இலங்கைக்கு கடந்த 11ஆம் திகதி அழைக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் இளைஞனை பாதித்த மலேரியாக் கிருமி பிளாஸ்மோடியம் ஃபல்சிபோறம் என கண்டறியப்பட்டது.
அதேவேளை இலங்கையில் மலேரியா நோய் முற்றாக அழிக்கப்பட்டமையினால் மீண்டும் நுளம்பின் மூலம் தொற்றும் மலேரியா நோய் பரவாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பதற்கு இவ்வாறு வெளிநாடு சென்று மீள்பவர்கள் விமான நிலையத்திலுள்ள வைத்திய அதிகாரியிடமோ அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ வைத்தியசாலையிலோ அணுகி உரிய மருத்துவ ஆலோசனையை பெறுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மலேரியா நோய் தடுப்பு மருந்தும் பெறலும் அத்தியாவசியமாகும் என போதானாவின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனாநந்தா குறிப்பிட்டுள்ளார்.