வெளிநாடு மோகத்தால் ஏமாந்த யாழ்ப்பாண இளைஞர்கள்; நட்சத்திர விடுதிகளில் நடக்கும் மர்மம்!
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் , அச்சுவேலி பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் இரு இளைஞர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் யாழ்ப்பாண கிளையிலும் இளைஞர்கள் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர்.
பணம் பெற்றதும் தலைமறைவு
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் அதற்கான ஆலோசனைகளை வழங்குவதாகவும் நபர் ஒருவர் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று நட்சத்திர விடுதிகளில் தங்கி நின்று பணத்தை ஏமாற்றியுள்ளார்.
வெளிநாட்டு கனவுகளுடன் , இருப்போரை தமது வலையில் விழுத்தி விடுதிகளுக்கு அழைத்து ஆசை வார்த்தைகளை கூறி , அவர்களிடம் இருந்து பெருந்தொகை பணத்தினை பெற்ற பின்னர் தலைமறைவாகி விடுவார்.
குறித்த நபர் குறித்து இலங்கையின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் பொலிஸாரால் கைது செய்ய முடியாதவளவுக்கு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது
இந்நிலையில் வெளிநாட்டு முகவர்கள் என கூறும் நபர்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் , அவர்களை நம்பி பெருந்தொகை பணத்தினை வழங்கி ஏமாற வேண்டாம் என பொலிஸார் கோரியுள்ளனர்.