யாழ் வல்லிபுர ஆழ்வார் பெரும் திருவிழா ஆரம்பம்; இன்று கொடியேற்றம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவ திருவிழா இன்று (11) கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மகோற்சவத்தின் தேர் திருவிழா 25 ஆம் திகதியும் தீர்த்த திருவிழா 26 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. புரட்டாதி மாதம் பூரணைத் திதியில் தீர்த்த உற்சவம் நிகழக் கூடிய வகையில் 15 நாட்கள் மகோற்சவம் நடைபெறும்.

16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நிகழ்த்தப்படும். வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற தலமாகும்.

வட பகுதியை நாகர்கள் ஆட்சி செய்தபோது அவர்கள் நாகம், சூரியன் ஆகியவற்றை வழிபட்டதாகவும் அவர்கள் வசித்த பிரதேசங்களில் ஒன்றாக வல்லிபுரம் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.
