யாழ் வட்டுக்கோட்டையில் திடீரென அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள்!
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் சமீப காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் வீடு உடைத்து நகை, பணம் திருட்டு, மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி கொள்ளை என கொள்ளை சம்பவங்கள் வட்டுக்கோட்டையில் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கடந்த 30.09.2022 அன்று அராலியில் உள்ள ஆசிரியரின் வீடு உடைக்கப்பட்டு கவரிங் நகை களவாடப்பட்டுள்ளது.
03.10.2022 அன்று இரவு, அராலி வடக்கில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.
நேற்றையதினம் சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டிற்குள் உள்நுழைந்த திருடர்கள் மடிக்கணினி மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றினை திருடிச் சென்றுள்ளனர்.
இன்று காலை நவாலி வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரின் நகையும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இவற்றினை விட மோட்டார் சைக்கிள் திருட்டு, சைக்கிள் திருட்டு என திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் குணதிலக அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து தற்போது பொறுப்பதிகாரியாக கொஸ்டா அவர்கள் பணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.