யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் போலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸார் , யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் போது , வீதியில் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்தனர். அதன் போது வாகனத்தினுள் ஆற்று மணல் காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் சாரதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட வேளை , மணல் எடுத்து செல்வதற்கு வழங்கப்பட்டதாக அனுமதி பத்திரம் ஒன்றினை சாரதிகள் பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.
அவற்றினை பொலிஸார் சோதனை செய்த போது , அவை போலியான அனுமதி பத்திரம் என்பதனை பொலிஸார் கண்டறிந்து , மணல் கடத்தி சென்ற குற்றச்சாட்டில் இரு சாரதிகளையும் கைது செய்தனர்.
அதேவேளை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தினையும் பறிமுதல் செய்து பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இருவரையும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.