தையிட்டி காணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ; அரசாங்கம் அறிவிப்பு
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் விஹாரை அமைந்துள்ள காணியில், பொதுமக்களுக்கு வழங்கப்படக்கூடிய காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, தையிட்டி பகுதியில் காணி வழங்க முடியாதவர்களுக்கு மாற்றுக் காணியைப் பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

காணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, விடுவிக்கப்படக்கூடிய காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கள நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டதும், காணி உரிமையாளர்களின் உரித்துத் தொடர்பில் உறுதி செய்யப்படும் எனவும் அமைச்சர் சந்திரசேகர் எமது செய்தி சேவைக்குக் குறிப்பிட்டார்.
தையிட்டி காணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அத்துடன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.