வடக்கில் தமிழ் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தும் அரசியல் கட்சிகள்! சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவு
‘‘தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதனுடைய ஆதரவாளர்களும் தமிழ் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தும் முகமாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்‘‘ என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தையிட்டி பகுதியில் நேற்றைய தினம் (23.05.2023) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு சில உறுப்பினர்கள் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தநிலையில் அவர்களுடைய ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் ஊடகவியலாளர்களை மலினப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையும் ஆதரித்திருப்பது சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் விசனத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த முறை இடம்பெற்ற தையிட்டி போராட்டத்தின் போது இரவு பகலாக ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் ஊடகங்களுக்கு கருத்து கூற விருப்பமில்லை என தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கருத்து கூற மறுத்ததுடன் தங்களுக்கு ஊடகங்கள் தேவையில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் அவ்விடத்தை விட்டு சென்றிருந்தனர்.
சமூக ஊடகங்களில் விமர்சனம்
இந்நிலையிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளர்கள் என தங்களை காட்டிக் கொள்ளும் ஒரு சிலர் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் சமூக ஊடகங்கள் ஊடாக விமர்சித்து வருகின்றனர்.
அதனுடைய தொடர்ச்சியே இன்றும் ஊடகவியலாளர்கள் மீதான கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கடந்த முறை இடம்பெற்ற போராட்டத்தின்போது ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எந்தவித கருத்துகளையும் கூறமாட்டோம் என கூறிவிட்டு தம்முடைய கட்சியினுடைய சமூக ஊடகங்களுக்கு கருத்துக்களை அவர்கள் தெரிவித்து இருந்தார்கள்.
இதனால் குறித்த போராட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேறியிறுந்தனர். இந்த நிலையில் ஊடகவியலாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் சமூக ஊடகம் மூலம் தமழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்கி பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
