யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருட பூர்த்தி
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ்ப்பாணம் பொது நூலகம் சிங்கள காடையர்களால் தீவைத்து எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு அடைந்துள்ளது.
1981 ஆம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாண நூலகம் சிங்கள காடையர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.
43ஆவது ஆண்டுகள்
இந்நிலையில் யாழ்ப்பாண பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் யாழ் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா ,நூலக ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன் இதன்போது நூலகம் எரிக்கப்பட்டபோதும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழினத்தின் வரலாற்றுச்சுவடு
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் அப்போதைய இலங்கை அரசால் யாழ்ப்பாண பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
யாழ் பொது நூலகத்தில் இருந்த 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் சிங்கள ஆதிக்க வெறியர்களால் அழிக்கப்பட்டது.
ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.
20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்கள் மற்றும் பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் யாழ்ப்பாண பொது நூலகம் வளர்ச்சி பெற்றிருந்தது.
இந்த நிலையில் யாழ் பொது நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அடைந்து கொண்டிருந்தபோது 1981 ஜுன் 1 இல் பகலில் எரிக்கப்பட்டுச் சாம்பலானது .
இன்று யாழ்ப்பாண பொது நூலகம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.