யாழில் ரவுடிகள் குழு அட்டகாசம்; முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!
யாழ்.அச்சுவேலியில் நேற்றய தினம் இரவு 11 மணியளவில் வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியும் பொலிஸார நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில்,
அச்சுவேலி மேற்கு , ஜோன்ராஜா வீதியில் கைக்குழந்தையுடன் வசித்து வரும் இளம் தம்பதியினரின் வீட்டினுள் நேற்று இரவு 11 மணியளவில் மூவர் அடங்கிய கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதன்போது வீட்டின் கேட், யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் என்பவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டு அவற்றை சேதப்படுத்தியதுடன் , வீட்டில் இருந்த தம்பதியினரையும் மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
ரவுடிகளின் இந்த தாக்குதலில் சுமார் 1 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருள் சேதமாகியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இரவே முறைப்பாடு வழங்கியபோதும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.
இதன் காரணமாக வீட்டில் இருந்தோர் இரவு முழுவதும் பெரும் அச்சத்துடனே காணப்பட்டதுடன் இன்று காலை 10 மணி வரையில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளனர்.
இதேவேளை தாக்குதலுக்குள்ளான வீடு , அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

