யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க திட்டம்
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பும், அதனை அண்டியுள்ள காணிகளும் விகாரைக்குரியது என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பூர்வீக காணி உரிமையாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இதனைத் தெரிவித்த அவர்கள்,
எதிர்வரும் 11 ஆம் திகதி மாலை முதல் பௌர்ணமி தினத்தன்று மாலைவரை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
மக்களது காணிகள் மக்களுக்கே சொந்தமானது எனவும் அவை மக்களுக்கு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய தாங்கள் உரிமங்களுடன் இருக்கும் வேளையில் தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய காணி நிலங்களும் விகாரைக்குரியதென அகில இலங்கை பௌத்த மகாசபை கூறுவதை ஏற்க முடியாது என பூர்வீக காணி உரிமையாளர்கள் குழுவினர் தெரிவிக்கின்றனர்.