யாழ். செம்மணி மயானத்திற்கு அருகாமையில் விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் செம்மணி மயானத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் வியாழக்கிழமை (31) உயிரிழந்துள்ளார்.
மீசாலை கிழக்கு மீசாலை பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணசாமி லிங்கேஸ்வரன் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 28ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்துகொண்டிருந்தார்.
இதன்போது செம்மணி மயானத்திற்கு அருகாமையில் வீதியால் சென்ற துவிச்சக்கர வண்டியை முந்துவதற்கு முயற்சித்தவேளை துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர்.
துவிச்சக்கர வண்டியில் சென்றவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (31) இரவு உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.