யாழ்ப்பாணம் நிலாவரை தொடர்பில் காரசாரமான விவாதம்
யாழ்ப்பாணத்தின் பிரசித்திபெற்ற நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸிற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திக்கும் இடையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தொல்லியல் திணைக்களம் தொடர்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
தொடர்ந்து நிலாவரையில் இருந்து தொல்லியல் திணைக்களம் விலகி பிரதேச சபையிடம் அதை கையளிக்க வேண்டும் எனவும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
வலிகாமம் கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்
வலிகாமம் கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (16) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நிலாவரை பகுதி சுற்றுலா வலயமாக உள்ளமையினால் அதை மேம்படுத்துவது பற்றி ஆராயப்பட்டது.
இதன்போது இப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் தலையீடுகளால் அதை முன்னேற்ற முடியாதுள்ளதாக தவிசாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது பதிலளித்த அபிவிருத்தி குழுவின் தலைவர் ரஜீவன் எம்பி ,
தொல்லியல்திணைக்களத்தினால் இப்போது பிரச்சனை கிடையாது. கடந்த கால அரசாங்கத்தில் இடம்பெற்றதுபோல தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை.
நீங்கள் அரசியல் ரீதியில் குழப்பங்களை விளைவிக்க வேண்டாம். என தொடர்ந்து அரசாங்கத்தினை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அபிவிருத்திக்குழு தலைவரின் கருத்துக்களை எதிர்த்த தவிசாளர்,
தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் பௌத்த பேரினவாத அடிப்படையில் கொண்டுள்ள கட்டமைப்பிலோ ல்லது அத் திணைக்களங்களுக்கு குவிக்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களால் அரசாங்கம் மாற்றங்களை ஏற்படுத்தாது சம காலத்தில் அத் திணைக்களங்களால் எமது மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறக்கூடாது.
எமது மக்கள் சம கால சமாளிப்புக்களை எதிர்பார்க்கவில்லை. மாறாக நிரந்தர தீர்வை எதிர்பார்க்கின்றனர். தங்களுடைய கட்சி பாராளுமன்றில் அறுதிப் பெரும்பான்மையுடன் உள்ளது.
இந்த நிலையில் சரியா சட்ட மாற்றங்களை இலகுவாகக் கொண்டுவந்து எமது மக்களுக்கு சரியான தீர்வுகளை முன்வைக்க முடியும். இப்போது பிரச்சனை இல்லை என்பது பதில் அல்ல.
சரியான தீர்வுகளே முக்கியம் என தவிசாளரினால் வாதிடப்பட்டது. வாதங்கள் வலுத்த நிலையில் கூட்டத்தை நிறுத்த வேண்டிவரும் என அபிவிருத்திக் குழுத் தலைவர் தவிசாளரை நோக்கி எச்சரித்தார்.
அதன்பின்னர் அபிவிருத்திக் குழுத் தலைவர் நிலாவரையில் இருந்து தொல்லியல் திணைக்களத்தை விலக்கி பிரதேச சபையின் கீழ் கொண்டு வருவதற்கான முடிவை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.