அதிரடி காட்டிய யாழ்ப்பாண மாநகர சபை
யாழ்ப்பாண மாநகர சபையினால் சீல் வைத்து பூட்டப்பட்ட கடையினை, அக்கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் நபர், அத்துமீறி கடையைத் திறந்து வியாபாரம் செய்த நிலையில், அக்கடையினை மாநகர சபை முழுமையாக பொறுப்பேற்றுள்ளது.
யாழ். மாநகர் பகுதியில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான சிற்றங்காடி கடைத்தொகுதியில், கடை ஒன்றில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர், மாநகர சபையின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மாநகர சபையினால் அக்கடை சீல் வைத்து மூடப்பட்டது.
அத்துமீறி வியாபாரம்
இந்நிலையில், அக்கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நபர், சீல் வைத்த கடையினை அத்துமீறி திறந்து, வியாபாரம் செய்துள்ளார்.
இது தொடர்பில் மாநகர சபை முதல்வருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மாநகர சபை வருமான வரி பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினரை கடைக்கு அனுப்பி, கடைக்கு மீண்டும் சீல் வைக்குமாறு முதல்வர் பணித்துள்ளார்.
அவர்கள் அங்கு சென்றவேளை கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர், கடைக்கு சீல் வைக்க உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைக்காமல் முரண்பட்டமையால், அவ்விடயமறிந்த முதல்வர், யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததோடு, பொலிஸாருடன் சம்பவ இடத்திற்குச் சென்று, வியாபார நடவடிக்கைகளை உடன் நிறுத்தி, கடைக்கு சீல் வைத்ததுடன், கடையினை மாநகர சபையினர் மீள பாரமெடுப்பதாக அறிவித்தலையும் ஒட்டிச் சென்றுள்ளார்.