வேலணையை அசிங்கப்படுத்திய யாழ் மாநகரசபை!
யாழ் மாநகரசபையால் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீள அகற்றுமாறு வேலணை பிரதேச சபை குறித்த தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் யாழ் மாநகரசபையின் செயற்பாட்டிற்கு தமது கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ் மாநகரப் பகுதியில் மாநகர சபையினரால் புல்லுக் குளம் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், குளத்தில் இருந்த கழிவுகளை வேலணை பிரதேச சபையின் அனுமதியின்றி , மண்கும்பான் மையப்பகுதிக்குள் டிப்பர் வாகனங்களில் கொண்டுவந்து கொட்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் யாழ் மாநகர சபையின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கைக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அது தொடர்பில் வேலணை பிரசே சபைக்கும் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து அங்கு சென்று பார்வையிட்ட பிரதேச சபை அதிகாரிகள் கழிவுகளுடன் வந்த இரண்டு டிப்பர் வாகனங்களை வழிமறித்தது திருப்பி அனுப்பியிருந்தனர். மேலும் ஏற்கனவே குறித்த பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை மீளவும் அகற்றுமாறு எழுத்து மூலம் கோரியுள்ளதுடன் யாழ் மாநகர சபையின் இத்தகைய நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ் மாநகர சபையின் கழிவுகளை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கள் எற்கனவே கொட்டப்பட்டு வருவதால் கல்லுண்டாய் பகுதியின் சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ் மாநகரசபை மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கிடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

