யாழ்.கோண்டாவில் வீடு புகுந்து மீது தாக்குதல் நடத்தியவருக்கு நேர்ந்த கதி!
யாழில் உள்ள வீட்டொன்றின் மீதும் வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதல் நடாத்தி அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இச் சம்பவம் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்களால் சமாதானமாக முடிக்க முற்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைக்கபெற்றதன் அடிப்படையில் பொறுப்பதிகாரி நேரடியாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபரை கைது செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கோண்டாவிலில் உள்ள வீடொன்றினுள் புகுந்து வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டு, வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
இசம்பவத்தின் போது தலையில் காயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காயத்துக்கு 16 இழைகள் போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட வைத்தியசாலை பொலிஸார், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்ட யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் தாக்குதலாளியையும், தாக்குதலுக்கு இலக்கானவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, முறைப்பாட்டினை பதிவு செய்யாது நாட்களை கடத்தி வந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைக்கப்பெற்றதனை நேரடியாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்து நீதிவான் முன்னிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை (29-01-2022) முற்படுத்தினார்.
இதனையடுத்து சந்தேக நபரை எதிர்வரும் பெப்ரவரி 03-02-2022ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.