jaffna kings அணியில் இடம்பெற்ற மோசடி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட Jaffna kings அணியின் இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் Jaffna kings அணியின் உரிமையாளரான மஞ்சோட் கல்ரா மற்றும் குறித்த சம்பவத்திற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாக கூறப்படும் இந்திய பிரஜையான யுவராஜ் புஷ்பா ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி முறைகேடு
விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நான்கு போட்டிகளுக்காக 3 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்க திட்டமிடப்பட்டதாகவும், இதுதொடர்பான உரையாடல் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதால், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸ் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.