யாழ் செம்மணி மனித புதைகுழி; நீதிமன்றின் உத்தரவு
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தின் நிலத்தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு ஏதும் செய்வதாயின் நீதிமன்ற அனுமதி அவசியம் எனவும் மன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று (19) எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

நல்லூர் பிரதேச சபையினர் செப்பனிட்டமை
குறித்த பகுதியில் ஏற்கனவே இருந்த வீதிக்கு மேலாக அதனை நல்லூர் பிரதேச சபையினர் செப்பனிட்டமை அவதானிக்கப்பட்டது. குறித்த விடயம் சட்டத்தரணிகளால் நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அதனை தொடர்ந்து, குறித்த பகுதியில் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்வதற்கான அனுமதியும் கொடுக்கக் கூடாது எனவும் முழுமையான அகழ்வு பணிகள் பூர்த்தியாகும் வரை நிலத்தோற்றத்தில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் , இதில் எதிர்வரும் காலத்தில் எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தின் அனுமதி அவசியம் என சட்டத்தரணிகளால் வலியுறுத்தப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் குறித்த விடயத்தை கவனம் செலுத்தி எதிர்காலத்தில் செயற்பட உத்தரவிட்டார்.